/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ஸ்ரீ அரவிந்தர்
/
மனதிற்கு பயிற்சி வேண்டும்
/
மனதிற்கு பயிற்சி வேண்டும்
ADDED : டிச 12, 2007 09:28 PM

சுதந்திரமான ஆசையற்ற ஆன்மாவிற்கே கலப்பற்ற இன்பம் உரித்தானது. ஆனால், சாதாரண மனிதனைப் பொறுத்தமட்டில் துயரமும், பிரயாசையும் கொண்ட ஒரு சக்தியே சுகமாகத் தெரிகிறது.
உயிர் அனுபவிக்கும் சுகமானது, இறைவனது உண்மையான இன்பத்தின் ஓர் அற்பக் குறிப்பேயாகும். உடல் ஓர் அச்சைப்போன்றது. ஆகவே வரம்புகள் உடையது.
நமக்குள்ளே அகண்ட ஒற்றுமையை அடைந்து, பின்னர் உலகுக்கு நம்மை ஈவதே முழுச் சுதந்திரமும், சம்பூர்ண ஆதிபத்தியமும் ஆகும்.
சாகாமை, ஒருமை, சுதந்திரம்.. இவை யாவும் நம்முள்ளேயே உள்ளன. நமக்குள் இருக்கும் இவற்றை நாம் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். * சேதமடைந்த கப்பலிலுள்ளோர் அனைவருமே மூழ்கிவிட, என்னை மட்டும் காப்பாற்றிக்கரை சேர்ப்பவன் கடவுள் அல்லன். அனைவருமே காப்பாற்றப்பட, நான் பிடித்துள்ள கடைசிப் பலகையையும் என்னிடமிருந்து பிடுங்கி, என்னை மட்டும் கடலில் முழ்கடிப்பவனே காத்தளிக்கும் கடவுள்.
மக்களைக் கைதூக்கி விடு; ஆனால் அவர்கள் தங்களது ஆற்றலை இழந்து விடும்படிச் செய்யாதே.
மனித மனத்தை அதன் குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் வளர்ச்சியடைந்த நிலையிலும் ஆய்வதால் கிடைக்கும் அறிவே கல்வியின் உண்மையான அடிப்படையாகும். மனிதன் கல்லாகவோ, மரமாகவோ இருந்தால், அவனைக் கல்வியின் தலைசிறந்ததொரு படைப்பாக உருவாக்குவது கல்வியாளரால் இயலாது. நம்முடைய தசைகளுக்குப் பயிற்சியளிப்பதைப் போலவே மனதிற்கும் எளிய சிக்கலற்ற வழிமுறைகளால் முழுமையான பயிற்சியளிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால், மனதிடமிருந்து அருஞ்சாதனைகளை எதிர்பார்க்க இயலாது.